search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி விபத்து"

    • வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.
    • உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா (வயது 30). இவர் கண்டமனூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தார்.

    பின்னர் மீண்டும் தனது ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வேனில் கையை வெளியே வைத்தபடி வந்ததால் அந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக பிரியாவின் கையில் உரசியது.

    இதில் அவரது வலது கை துண்டாகி கீழே விழுந்தது. இதனால் அவர் வலியில் அலறி துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை பிடித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசேஷத்துக்கு சென்ற போது நடந்த விபத்தில் பெண்ணின் கை துண்டானது உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த முத்துகிளி மகன் லோகேஸ்வரன்(19). போடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான நாட்டுத்துரை(19) என்பவருடன் பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த மாணவர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நாட்டுத்துரை படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர். இதுகுறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர்.
    • ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    தேவதானப்பட்டி:

    சென்னை மயிலாப்பூர் பரமேஸ்வரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(69). இவரது மனைவி சந்திரிகா(65). இவர்களுக்கு சொந்தமான வீடு கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் என்ற பகுதியில் உள்ளது.

    தீபாவளி பண்டிகையை இங்கு கொண்டாடுவதற்காக நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் பஸ்சில் வந்தனர். தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார்(35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    இரவு 12.30 மணியளவில் ஆட்டோ காட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில நிலை குலைந்து ஆட்டோவை அருண்குமார் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்திசையில் பண்ணைக்காட்டில் இருந்த காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்த வேன் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி கமலக்கண்ணன் மற்றும் அவரது மனைவி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ஆட்டோ டிரைவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த தம்பதியின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன்(21) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் பகுதியில் பெரும்பாலானோர் வில்லா என்ற குடியிருப்பை அமைத்துள்ளனர். இங்கு வயது முதிர்ந்த தம்பதியினர் மட்டுமே வசித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பலர் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி இதுபோன்ற இடங்களை தேர்வு செய்து இல்லங்களை அமைத்துள்ளனர். பெரும்பாலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் கேட்கும் பட்டாசு, வெடிச்சத்தம் இப்பகுதியில் இருக்காது. இதனால் சென்னையில் இருந்து பட்டாசு, வெடி சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொண்டு வந்த புத்தாடைகள் மற்றும் பலகாரங்களும் சிதறி கிடந்தன.

    • கட்டப்பனை அருகே சாகச பயணத்தின் போது டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் பாய்ந்தது. இதில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால் பினு ரூ.12 ஆயிரத்து 160 அபராதம் செலுத்த மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அடுத்த வெள்ளையாம்குடி பகுதியைச் சேர்ந்தவர் பினு(வயது 20). இவர் மற்றும் 3 வாலிபர்கள் வெள்ளையாம்குடியில் இருந்து கட்டப்பனை செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாகச பயணத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக சென்று மோட்டார் சைக்கிளை முன்புறம் மற்றும் பின்புறம் தூக்கி சாகசத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3 பேரும் முன்னால் சென்றனர். பினு மட்டும் பின்னால் வந்து கொண்டிருந்தார். வெள்ளையாம்குடி பகுதியில் சென்றபோது பினு சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    இதற்கிடையே ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிள் அந்தரத்தில் பறந்து சென்றது. அப்போது பினு பதற்றத்தில் அலறினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையோரம் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு அதன்மீது மோதி சொருகியது. இதில் பினு அந்தரத்தில் கீழே தொங்கிய நிலையில் திடீரென கீழே விழுந்து காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த கட்டப்பனை போலீசார் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த பினு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக வாகன கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரமணன் கூறினார். இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால் பினு ரூ.12 ஆயிரத்து 160 அபராதம் செலுத்த மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சாகச பயணத்தின் போது டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் வாலிபர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×